உதவியளிக்கப்படும் சுயவிருப்ப இறப்பு

உதவியளிக்கப்படும் சுயவிருப்ப இறப்பு – NSW மாநிலம்

இந்த ஏடு இறப்பைப் பற்றியும் இறப்பதைப் பற்றியுமான தகவல்களை அளிக்கிறது. உதவியளிக்கப்படும் சுயவிருப்ப இறப்பைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ள விரும்பும் கலாசார மற்றும் மொழிரீதியாகப் பரந்துபட்ட பின்புலங்களைச் சேர்ந்தவர்களுக்கானதாகும் இது. உங்கள் மொழியில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை NSW சுகாதாரத் திணைக்களம் -இன் வலைத்தலத்தில் நீங்கள் காணலாம், அத்துடன் உங்களுக்கு உதவ மொழிபெயர்த்துரைப்பாளர்கள் கிடைப்பர்.

உதவியளிக்கப்படும் சுயவிருப்ப இறப்பு என்பது சிலருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் உணர்வுகளைப் புண்படுத்தக் கூடிய விடயமாக இருக்கலாம். உங்களுடைய விழுமியங்களுக்கும், நம்பிக்கைகளுக்கும் உதவியளிக்கப்படும் சுயவிருப்ப இறப்பு அமைவானதா என்பதை முடிவு செய்ய உங்களுடைய அன்பிற்குரியவர்களுடனும் சமூகத்தினருடனும் நீங்கள் கலந்துபேசலாம்.

Last updated: 24 November 2023
Download

​உதவியளிக்கப்படும் சுயவிருப்ப இறப்பு என்பது என்ன?

இறப்பதற்காக மருத்துவ உதவி வேண்டுமென சிலர் மருத்துவர் ஒருவரைக் கேட்கலாம்.

இது அனைவருக்குமானதல்ல – இதற்கான தகுதித் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்தாகவேண்டும், மற்றும் தகுதி பெறும் அனைவராலும் அதனைத் தெரிவு செய்வதில்லை. இது உங்களுடைய விருப்பம். நீங்கள் விரும்பும் நேரத்திலும் இடத்திலும் உங்களுடைய இறப்பினை ஏற்படுத்தும் மருந்தை நீங்கள் உட்கொள்வீர்கள் அல்லது அது உங்களுக்குக் கொடுக்கப்படும்.

அங்கீகரிக்கப்பட்டுள்ள, மற்றும் சிறப்புப் பயிற்சி பெற்றுள்ள மருத்துவர் ஒருவரால் மட்டுமே இந்த மருந்தினை உங்களுக்குக் கொடுக்க இயலும். 

உதவியளிக்கப்படும் சுயவிருப்ப இறப்பினை யாரல் பெற இயலும்?

உதவியளிக்கப்படும் சுயவிருப்ப இறப்பை நீங்கள் தெரிவு செய்ய விரும்பினால், கட்டாயமாக நீங்கள்:

  • 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராக இருக்கவேண்டும். 17 அல்லது அதற்குக் குறைந்த வயதுடைய குழந்தைகள் இதற்குத் தகுதிபெற மாட்டர்
  • ஒரு ஆஸ்திராலியப் பிரசையாக, அல்லது நிரந்தர வதிவாளராக இருக்கவேண்டும், அல்லது தொடர்ச்சியாகக் குறைந்த பட்சம் மூன்று வருடங்களுக்கு ஆஸ்திரேலியாவில் வசித்திருக்கவேண்டும்
  • NSW மாநிலத்தில் குறைந்தபட்சமாக 12 மாதங்களுக்கு வசித்திருக்க வேண்டும்
  • நரம்புமண்டலச் சிதைவு நோய் (உங்களுடைய மத்திய நரம்பு மண்டல உயிரணுக்களின் செயல்பாடு நின்றுவிடும், அல்லது அவை இறந்துவிடும் நிலை) ஒன்று உங்களுக்கு இருந்து 6 மாதங்கள் அல்லது 12 மாதங்களில் உங்களுடைய இறப்பைத் தோற்றுவிக்கும் நோய் ஒன்று உங்களுக்கு இருக்கவேண்டும்
  • பெரும் வலியினை ஏற்படுத்தும் நோய் ஒன்று உங்களுக்கு இருந்தால். இந்த நோவானது உடல்ரீதியானதாகவோ, சமூகரீதியானதாகவோ, உணர்வுரீதியானதாகவோ இருக்கலாம். உங்களுடைய வலியின் அளவினை நீங்கள் விளங்கிக்கொள்ளவும், இந்த வலியைக் கட்டுப்படுத்த உங்களுக்கு உள்ள தெரிவுகளை உங்களுக்கு விளக்கிச் சொல்லவும் உங்களுடைய மருத்துவர் உங்களுடன் பேசுவார்
  • உங்களுடைய சொந்த முடிவுகளை மேற்கொள்ளவும், அவற்றை மற்றவர்களுக்குத் தெரிவிப்பதற்குமான இயலுமை இந்தச் செயல்பாடு நெடுக உங்களுக்கு இருக்கவேண்டும்
  • உதவியளிக்கப்படும் சுயவிருப்ப இறப்பைப் பெறுவதற்கான தேவை உங்களுக்கு இருக்கவேண்டும். சுய விருப்பு என்பது கட்டாயமாக உங்களது தெரிவைக் குறிப்பதாகும்.

மன நோய் அல்லது இயலாமை ஒன்று இருப்பது மட்டுமே தகுதியளிக்கும் காரணம் அல்ல. இருப்பினும், மேலே சொல்லப்பட்டுள்ள அனைத்து தகுதித்தேவைகளும் உங்களுக்கு இருந்தால், அத்துடன் இயலாமை அல்லது மன நோய் ஒன்று உங்களுக்கு இருந்தால், உதவியளிக்கப்படும் சுயவிருப்ப இறப்பை நீங்கள் பெறலாம் (முக்கியமாக, உங்களுடைய சொந்த முடிவுகளை மேற்கொள்வதற்கும், அவற்றை மற்றவர்களுக்குத் தெரிவிப்பதற்குமான இயலுமை உங்களுக்கு இருக்கவேண்டியது அவசியம்).

உதவியளிக்கப்படும் சுயவிருப்ப இறப்பு முறையை அடைந்து பெறுவது எவ்வாறு?

NSW மாநிலத்தில், நீங்கள் பின்பற்ற வேண்டிய சட்டப் படிநிலைகள் உள்ளன. பெரும்பான்மையான படிநிலைகளைப் பொறுத்தவரை அவற்றினூடாக உங்களால் இயலுமான துரிதத்தில் நீங்கள் பயணிக்கலாம். 

உதவியளிக்கப்படும் சுயவிருப்ப இறப்பைப் பற்றி உங்களுடைய மருத்துவருடன் பேசுவதில் இருந்து துவங்குங்கள். பெரும்பான்மையானவர்களுக்கு, உங்களுக்குச் சிகிச்சையளித்துவரும் அணியிலுள்ள உங்களுடைய நோய்க்கான சுகாதாரப் பராமரிப்பை அளித்துவரும் ஒரு மருத்துவராக இவர் இருப்பார். 

NSW மாநிலத்தில் சில மருத்துவர்களால் மட்டுமே உதவியளிக்கப்படும் சுயவிருப்ப இறப்பை அளிக்க இயலும். உங்களுடைய மருத்துவர் சுயவிருப்பு இறப்பை அளிக்காதவர் என்று அவர் கூறினால், NSW Voluntary Assisted Dying Care Navigator Service (NSW உதவியளிக்கப்படும் சுயவிருப்ப இறப்பு சேவை) -உடன் நீங்கள் தொடர்புகொள்ளலாம். உங்களுடைய மருத்துவர் சுயவிருப்பு இறப்பை அளிக்காதவர் என்று அவர் கூறினால், மருத்துவர் ஒருவரைக் கண்டறியவும், உங்களுடைய வினாக்களுக்கு விடையளிக்கவும் இந்த சேவகரால் உதவ இயலும்.

மொழி விடயங்களில் உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், 131 450 -இல் ‘மொழிபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்ப்பு சேவை’(TIS National)யை அழைத்து 1300 802 133-இல் கிடைக்கும் NSW Voluntary Assisted Dying Care Navigator Service சேவை வேண்டுமென நீங்கள் கேட்கலாம்.

உங்களுடைய குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பராமரிப்பாளர்களது பங்கு

இறப்பு மற்றும் இறப்பது குறித்த முடிவுகளை குடும்பத்தினருடன் சேர்ந்து ஒன்றாக மேற்கொள்ள சிலர் விரும்பக்கூடும்.

உதவியளிக்கப்படும் சுயவிருப்ப இறப்பைத் தெரிவு செய்யும் தேவை உங்களுக்குத் இருக்கிறது என்று நீங்கள் கருதினால், உங்களுடைய அன்பிற்குரியவர்களுடன் இதைப் பற்றிய உரையாடல்களை நீங்கள் மேற்கொள்ளலாம்.  

பொதுவாக உங்களுடைய உடல்நலத்தைப் பற்றி முடிவுசெய்யும் அல்லது உங்கள் சார்பாக மருத்துவர் ஒருவருடன் பேசும் நபராக இவர் இருந்தால் இது முக்கியம்.

உதவியளிக்கப்படும் சுயவிருப்ப இறப்பைப் பற்றி உங்களுடைய மருத்துவருடன் நீங்கள் பேசும் பொழுது உங்களுடைய அன்பிற்குரியவர்கள் உங்களுடன் இருக்கலாம், ஆனால் சட்டத்தில் சில முக்கியமான விதிமுறைகள் உள்ளன:

  • இறப்பதற்கான மருத்துவ உதவி வேண்டுமென உங்களால் மட்டுமே கேட்க இயலும்
  • உதவியளிக்கப்படும் சுயவிருப்ப இறப்பு வேண்டுமென உங்கள் சார்பாக வேறெவரொருவராலும் கேட்க முடியாது
  • உதவியளிக்கப்படும் சுயவிருப்ப இறப்பு வேண்டுமெனக் கேட்குமாறு உங்களை யாரும் வற்புறுத்த முடியாது.

படிநிலைகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமென சட்டம் உரைக்கிறது. உதவியளிக்கப்படும் சுயவிருப்ப இறப்பைத் தெரிவு செய்யுமாறு இன்னொருவரால் உங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படவில்லை என்பதை இது உறுதிப்படுத்துகிறது. இது உங்களுடைய தெரிவு என்பதையும் இது உறுதிப்படுத்துகிறது.

இறப்பதற்கான மருத்துவ உதவி கேட்பதற்கான உங்களுடைய தெரிவினை விளங்கிக்கொள்வது உங்களுடைய குடும்பத்திலுள்ள சிலருக்கு சிரமமாக இருக்கலாம். உங்களுடன் அவர்கள் முரண்படலாம். நீங்கள் விரும்பினால், மற்றும் தகுதித் தேவைகள் அனைத்தையும் நீங்கள் பூர்த்தி செய்தால் உதவியளிக்கப்படும் சுயவிருப்ப இறப்பை அடைந்து பெறுவதிலிருந்து உங்களை அவர்களால் தடுக்க இயலாது.

மற்றவர்களுடைய கருத்துகள் வித்தியாசமானவையாக இருக்கலாம். உங்களுடைய நம்பிக்கைக்கு உரிய ஒருவருடன் நீங்கள் பேசவேண்டும் என்பது முக்கியம்.

தெரிந்துகொள்ளவேண்டிய மற்ற விடயங்கள்

  • உதவியளிக்கப்படும் சுயவிருப்ப இறப்புச் செயல்பாட்டினை நீங்கள் எவ்வொரு வேளையிலும் நிறுத்தலாம். காரணம் ஒன்றைத் தரவேண்டிய தேவை உங்களுக்கு இல்லை
  • உங்களுக்கு மருந்து பரிந்துரைக்கப்பட்டிருந்தால், அல்லது மருந்து உங்களிடம் வந்து சேர்ந்திருந்தால், அதை நீங்கள் உட்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை
  • இறுதி முடிவினை மேற்கொள்ளவும், மருந்தினை உட்கொள்ளவும் அல்லது மருந்து உங்களுக்குக் கொடுக்கப்படவும் நாட்கள், வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகலாம், இது சகஜமே
  • உங்களுடைய அன்பிற்குரியவர்கள் உங்களுடன் இருக்கும் பொழுது வீட்டில் நீங்கள் இந்த மருந்தினை உட்கொள்ளலாம். மருத்துவமனை அல்லது முதியோர் இல்ல வசதி போன்ற வேறொரு இடத்தில் நீங்கள் இருக்கும் பொழுது இந்த மருந்தை எடுத்துக்கொள்ளவேண்டிய தேவை உங்களுக்கு ஏற்பட்டால் உங்களுடைய அன்பிற்குரியவர்களும் உங்களுடன் இருக்கலாம். NSW மாநிலத்திற்கு வெளியில் உங்களால் இந்த மருந்தினை உட்கொள்ள இயலாது
  • இந்த மருந்தைப் பற்றியும் அது எவ்வாறு இருப்பில் வைக்கப்படுகிறது என்பதைப் பற்றியுமான கூடுதல் தகவல்களை உதவியளிக்கப்படும் சுயவிருப்ப இறப்பில் உங்களுக்கு உதவும் மருத்துவர் உங்களுக்குக் கொடுப்பார். இந்த மருந்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன.
  • உங்களைப் பற்றிய தகவல்களையும், தகவல்களின் இரகசியத்தன்மை குறித்து உங்களுக்குள்ள உரிமையையும் பாதுகாப்பதற்கான கடமை மருத்துவர்களுக்கு உள்ளது. உதவியளிக்கப்படும் சுயவிருப்ப இறப்பைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் நீங்கள் மேற்கொள்ளும் கலந்துரையாடல்கள் இதில் அடங்கும். உங்கள்  குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது பராமரிப்பாளர்களிடம் பேச நீங்கள் அனுமதித்தால் அன்றி உங்கள் மருத்துவர் அவர்களுடன் பேச முடியாது.
  • நீங்கள் பிராந்திய அல்லது தொலைதூர NSW மாநிலத்தில் வசிப்பவரானால் ‘தொலைதூர நோயாளர் பயண மற்றும் தங்குமிட ஒத்தாசைத் திட்டம்’ எனும் திட்டம் பயணம் மற்றும் தங்குமிடங்களுக்கு ஆகும் செலவுகளில் உங்களுக்கு நிதியுதவி அளிக்கிறது.
  • உதவியளிக்கப்படும் சுயவிருப்ப இறப்பும் தற்கொலையும் வெவ்வேறானவை. NSW மாநில சட்டத்தின் கீழ் இறப்பதற்காக மருத்துவ உதவி வேண்டுவது தற்கொலை அல்ல.
  • உங்களுடைய இறப்பிற்கான காரணம் உதவியளிக்கப்படும் சுயவிருப்ப இறப்பு என்று உங்களுடைய இறப்புச் சான்று காண்பிக்காது.

வாழ்க்கையின் இறுதிக் கட்டப் பராமரிப்பு

உங்களுடைய எதிர்காலத் தேவைகள், எதிர்பார்ப்புகள் மற்றும் விருப்பங்கள் ஆகியவற்றைப் பற்றி நீங்களும் உங்களுடைய மருத்துவரும் கலந்துபேசுவீர்கள். உங்களுடைய வாழ்க்கையின் இறுதியில் உங்களுடைய விருப்பங்கள் என்ன என்று தெரிந்துகொள்வதைப் பற்றியதாகும் இது.

நீங்கள் மேற்கொள்ளும் விருப்பத் தெரிவு எதுவானாலும் NSW சுகாதாரப் பராமரிப்புத் துறை உங்களைப் பராமரிக்கும்.

உதவியளிக்கப்படும் சுயவிருப்ப இறப்பை நீங்கள் தெரிவு செய்தாலும், உங்களுக்குத் தேவைப்படும் நோவுதணிப்புப் பராமரிப்பினை உள்ளடக்கிய மற்ற பராமரிப்பையும் உங்களால் அடைந்து பெற இயலும்.   

நோவுதணிப்புப் பராமரிப்பைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளுங்கள்: நோவுதணிப்புப் பராமரிப்பு.

‘NSW மாநில உதவியளிக்கப்படும் சுயவிருப்ப இறப்பு சேவை’

நோயாளர்கள் மற்றும் குடும்பத்தினர் உள்ளடங்க, ஒவ்வொருவரும் ‘NSW மாநில உதவியளிக்கப்படும் சுயவிருப்ப இறப்பு சேவை’-யைப் பெறலாம்.

உதவியளிக்கப்படும் சுயவிருப்ப இறப்பைப் பற்றிய கேள்விகளுக்கு விடையளிக்கவும், தேவைப்பட்டால் மருத்துவர் ஒருவரைக் கண்டறிய உதவவும் இதனால் இயலும். இது இச்செயல்பாட்டின் அனைத்து நிலைகளிலும் கிடைக்கிறது. 

‘பராமரிப்பு ஆதரவுதவி’ சேவகர் ஒருவருடன் பேச:

அழையுங்கள்: 1300 802 133 திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8:30 முதல் மாலை 4:30 வரை (பொது விடுமுறை நாட்கள் நீங்கலாக)

மின்னஞ்சல்: NSLHD-VADCareNavigator@health.nsw.gov.au

உதவியளிக்கப்படும் சுயவிருப்ப இறப்பு சேவையை அணுகிப் பெற மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவர் எனக்குத் தேவை. நான் என்ன செய்யவேண்டும்?

உதவியளிக்கப்படும் சுயவிருப்ப இறப்பை அடைந்து பெறும் செயல்பாட்டினைத் துவக்க ஆங்கிலம் தவிர்ந்த வேறொரு மொழியில் நீங்கள் பேச விரும்பினால் மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவரை நீங்கள் பயன்படுத்தலாம்.

மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவர் உங்களுக்குத் தேவையா என்பதை உங்களுடைய மருத்துவருக்குச் சொல்லுங்கள். உங்களுடைய மருத்துவரால் ஒருவரை ஏற்பாடு செய்ய இயலும். இது இலவசம்.

சிறப்புப் பயிற்சி பெற்ற குறிப்பிட்ட சிலர் மட்டுமே உதவியளிக்கப்படும் சுயவிருப்ப இறப்பிற்கான உங்களுடைய மொழிபெயர்த்துரைப்பாளராக இருக்க இயலும்.

சிறப்புப் பயிற்சி இல்லாத குடும்ப அங்கத்தவர், நண்பர், பராமரிப்பாளர் அல்லது தொடர்பாளர் ஒருவர் உங்களுடைய மொழிபெயர்த்துரைப்பாளராக இருக்க இயலாது. இதற்குக் காரனம் NSW மாநில சட்டமாகும்.  

மன நல ஆதரவுதவி

இறப்பு மற்றும் உதவியளிக்கப்படும் சுயவிருப்ப இறப்பு ஆகியவற்றைப் பற்றிப் பேசுவது கடினமானதாகவும், சோகமானதாகவும் இருக்கலாம். உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் பின் வரும் இந்த இலவச சேவைகளை அழையுங்கள்:

  • 1800 648 911 -இல் கிடைக்கும் Transcultural Mental Health Line (‘கலாசாரம் கடந்த மன நல சேவை இணைப்பு’) - திறப்பு நேரம்: திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 முதல் மாலை 4:30 வரை. உங்களுடைய கலாசாரத்தைப் பற்றித் தெரிந்த மற்றும் உங்களுடைய மொழியில் பேச இயலுமான சிகிச்சையாளர்களுடன் பேசுங்கள்
  • 13 11 14-இல் கிடைக்கும் Lifeline (‘லைஃப்-லைன்’) - தொலைபேசி மூல நெருக்கடி கால ஆதரவுதவிக்காக 24 மணி நேரமும் இந்த சேவை திறந்திருக்கும்
  • 1300 22 4636 -இல் கிடைக்கும் (‘பியோண்ட் ப்ளூ’) - தொலைபேசி மூல நெருக்கடி கால ஆதரவுதவிக்காக 24 மணி நேரமும் இந்த சேவை திறந்திருக்கும்
  • 1800 011 511 -இல் கிடைக்கும் (‘மன நல சேவை இணைப்பு’) - ‘NSW சுகாதார மன நல சேவைகளுடன் உங்களைத் தொடர்புபடுத்த 24 மணி நேரமும் இந்த சேவை திறந்திருக்கும்.

மேலதிகத் தகவல்கள்

Current as at: Friday 24 November 2023